இலங்கையில் கடலோர கடற்தொழில் நடவடிக்கையில் COVID-19இன் விளைவுகள் பற்றிய புரிதலைப் பெறுதல்

By New England Aquarium on Friday, November 20, 2020

wave
See caption below

இந்தப் பதிவு நீர்வாழ் உயிரினக்காட்சியகத்தின் கடற்பாதுகாப்பு நடவடிக்கை நிதியத்தினால் (Aquarium’s Marine Conservation Action Fund (MCAF)) ஆதரவு வழங்கப்படும்  தொடர்ச்சியான திட்டங்களில் ஒன்றாகும். MCAF இனூடாக, இந்த நீர்வாழ் உயிரினக்காட்சியகமானது கடல்வளம் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான பிரச்சினைகள் தொடர்பாக தமது கவனத்தினை செலுத்தும் உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் கீழ்மட்ட அமைப்புகளை ஆதரிக்கின்றது.

ஓசியன்ஸ்வெல்லானது இலங்கையின் முதலாவது கடல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் கல்வி தொடர்பான இலாப நோக்கற்ற ஓர் அமைப்பாகும். இது MCAFநிதியம் மற்றும் புகழ்பெற்ற நீல திமிங்கல விஞ்ஞானி கலாநிதி. ஆஷா டி வோஸ் ஆகியோரால் நிறுவப்பட்டது. அண்மையில் MCAFஆனது, ஆஷா மற்றும் ஓசியன்ஸ்வெல் குழுவினால் ஒழுங்கமைக்கப்பட்ட உலகளாவிய தொற்றுநோய் பரவல் காரணமாக இலங்கையிலுள்ள கடல்தொழிலாளர் சமூகங்களுக்கு ஏற்படும் தாக்கங்களை புரிந்து கொள்வதற்கான ஓர் திட்டத்திற்கு உதவியை வழங்கியது. விசேடமாக இந்தக் குழுவானது COVID-19 தொற்றுநோயால் கடற்தொழில் சமூகங்கள் வாழ்க்கைத்தளத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், இலங்கை அரசாங்கம் இந்த சமூகங்களுக்கு அளித்த ஆதரவு மற்றும் இது அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது என்பதைப் புரிந்துகொள்ள வினைத்திறனாக செயலாற்றியது. இந்தத் திட்டத்தில் உள்ளூர் மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அடுத்த தலைமுறை உள்ளூர் கடல் வீரர்களுக்கும், அவர்களது சொந்த சமூகங்களுக்குமிடையில் வலுவான உறவுகளை மேம்படுத்த இந்தத் திட்டம் உதவியது.  இந்த ஆக்கத்தை உருவாக்கியோர், ஓசியன்ஸ்வெல்லின் திட்ட அலுவலர், நதியா ஆஸ்மி மற்றும் பயிற்சியாளர் அர்ப்பனா கிரிதரன் ஆகியோர் பாதுகாப்பு மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் போதும் இந்த அற்புதமான திட்டத்தில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

Click here for the English translation.
සිංහල පරිවර්තනය සඳහා මෙතන ක්ලික් කරන්න

உருவாக்கம்: நதியா ஆஸ்மி மற்றும் அர்பனா கிரிதரன், ஓசன்ஸ்வெல்
தமிழ் மொழியாக்கம்: சத்தியவாகீஸ்பரன் சிவந்தன்

இலங்கையில் COVID-19இன் பாதிப்பு அதிகரித்ததால், மார்ச் நடுப்பகுதியில் இருந்து நாடு முடக்கப்பட்டிருந்தது. ஒரு கடல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் கல்விசார் அமைப்பாக நாங்கள் அடிக்கடி தொடர்பு கொண்ட உள்ளூர், பெரும்பாலும் சிறிய அளவிலான மீன்பிடி சமூகங்களுக்கு இது ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக நாங்கள் அதிக ஆர்வம் காட்டினோம். நாங்கள் நாடு முடக்கல் நிலையின் மிகுதிக்காலத்தினை நிதி திரட்டவும், செயற்திட்டத்தைத் தொடங்கவும் பயன்படுத்தினோம். ஆனி மாதத்தில் நாடு முடக்கல் நிலை தளர்த்தப்பட்டதன் காரணமாக, இந்த முக்கியமான பணியைத் தொடங்க எங்களுக்கு சாதகமான சமிக்ஞை கிடைத்தது. நாடு முடக்கல் நிலையினால் மீன்வள மதிப்பு சங்கிலியின் பங்குபற்றாளர்களான – மீனவர்கள், பதனிடுவோர் மற்றும் விற்பனையாளர்கள் போன்றோர் எதிர்கொள்ளும் விளைவுகளை அறிந்துகொள்வதற்காக ஒரு மதிப்பீட்டினை ஆரம்பித்தோம்.

இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கிளிநொச்சியின் பள்ளிக்குடாவில் ஒரு பதனீட்டாளரை அந்தோனி நேர்காணல் செய்யும் போது. புகைப்படம்: அந்தோனி சந்தோஷ் / ஓசன்ஸ்வெல்

இலங்கையின் கடற்கரைப்பகுதி 1340 கி.மீ. நீளமானதாக இருப்பதனால் நமது கடற்தொழிலாளர் சமூகங்கள் புவியியல் ரீதியாகவும் மற்றும் கலாச்சார ரீதியாகவும் பல்வகைமையடைந்து காணப்படுகின்றன. வெவ்வேறு கடற்தொழிலாளர் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சமூக-பொருளாதார மதிப்பீடு வடிவமைக்கப்பட்டதுடன், இலங்கைத் தீவின் 14 ஆய்வுப் பிரதேசங்களிலிருந்து 415 கடற்தொழில் பங்குபற்றாளர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். விசேடமாக நாடு முடக்கல் நிலையினால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகத்தின் மீது COVID-19இன் தாக்கங்களை புரிந்து கொள்வதே ஆய்வின் முதன்மை நோக்கம், அத்துடன் மொத்த மதிப்பீட்டின் மூன்றில் ஒரு பங்கு மதிப்பீடுகளின் போது மீனவ சமூகத்தின் பெண் அங்கத்தவர்கள் கவனத்திற்கொள்ளப்பட்டனர்.

ஒரு செயற்திறன் பயிற்சி சூம் செயலியினூடாக நடைபெற்றது. புகைப்படம்: அந்தோனி சந்தோஷ் / ஓசன்ஸ்வெல்

களக் குழுவில் 14 ஆராய்ச்சி உதவியாளர்கள் இருந்ததுடன் அவர்களில் சிலர் மீனவர்களாவர். எங்கள் செயற்திட்டத்தின் அளவு மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த செயற்திட்டத்தின் போது எங்களால் அனைத்து ஆராய்ச்சி உதவியாளர்களையும் நேரடியாக ஒன்று சேர்க்க முடியவில்லை. இருப்பினும் நாங்கள் எமது குழாமிற்கு வழங்கிய தீவிரமான செயற்திறன் பயிற்சிகளினூடு இத்தடைகளை வெளியேற்றி வழிநடத்தினோம். இந்த சமூக-பொருளாதார மதிப்பீடுகளின் போது சேகரிக்கப்பட்ட தரவு நேர்மையானது மற்றும் பயன்படுத்தக்கூடியது என்பதை உறுதிப்படுத்துவதற்காக அதிக திறமையும் பொறுமையும் தேவை என்பதுடன் ஆராய்ச்சி உதவியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதும் மிகவும் முக்கியமானது. தொடர்புகளையும், நம்பிக்கையையும் கட்டியெழுப்ப காலம் எடுப்பதன் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிட முடியாதது. தீவு முழுவதும் சிதறிக் காணப்படும் குழு உறுப்பினர்கள் மத்தியில் மன உறுதியைப் பராமரிக்க, நாங்கள் முறைசாரா வலைப்பின்னல் நிகழ்ச்சித் தொடர்களை இணைய வழியில் ஏற்பாடு செய்திருந்தோம். அதனால் அவர்கள் தங்கள் அனுபவங்களையும், களத்தில் இருக்கும்போது அவர்கள் சந்தித்த சவால்களையும் பகிர்ந்து கொள்ள முடியுமாயிருந்தது. இது அணியின் சக அங்த்தவர்களிடையே சிக்கலைத் தீர்ப்பதற்கான வாய்ப்பை வழங்கியது.

இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள மூதூரில் மட்டியில் புற ஓடுகளை பிரித்தக்கற்றும் ஒரு பதனீட்டாளரை முஜாஸ் நேர்காணல் செய்யும் போது. புகைப்படம்: முஹம்மது முஜாஸ்/ ஓசன்ஸ்வெல்

எங்கள் அணியின் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை கொடுத்ததனால், களத்தில் உள்ள அபாயங்களை நாங்கள் தொடர்ந்து மதிப்பிட்டதுடன் மதிப்பீட்டிற்குத் தேவையான அனைத்து தேவைப்பாடுகளுடன் முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் போன்ற முக்கியமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளையும் அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதனை உறுதிசெய்தோம். எங்கள் களக்குழு விரைவாக அணிதிரட்டப்பட்டதுடன் அவர்களின் சொந்த பிரதேசங்களிலுள்ள கடற்தொழில் பங்குபற்றாளர்களின் தாய்மொழியில் (சிங்களம் அல்லது தமிழ்) மதிப்பீடுகளை மேற்கொண்டனர். மதிப்பீடு செய்யப்பட்ட சமூகங்களுடன் ஏற்கனவே தொடர்புகளைக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி உதவியாளர்களுடன் இணைந்து பணிபுரிவதனூடாக நாங்கள் திரட்டிய தரவுகள் நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதுடன், அனைத்து தேவையான மதிப்பீடுகளையும் குறுகிய காலத்தில் சேகரிக்க முடியுமாயிருந்தது. ஒவ்வொரு கரையோரத்திலும் உள்ள வீரர்களை இணைத்துக்கொள்ளுதல் என்ற எமது நோக்கத்தை அடைய இந்த செயற்றிடடம் உதவிபுரிந்தது.

யாழ்ப்பாணத்தின் மாதகலில் ஒரு கடலோர மீனவரிடம் பேசும்போது தமிழினி குறிப்புகள் எடுக்கிறார். புகைப்படம்: தமிழினி கணேசலிங்கம் / ஓசன்ஸ்வெல்

திட்டத்தின் மூன்று மாதங்களில், நாங்கள் இப்போது தரவு பகுப்பாய்வின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம். இந்த அனுபவமானது ஒரு செங்குத்தான கற்றல் வளையியாக இருந்ததுடன், இது சமூக-பொருளாதார ஆராய்ச்சியை மேற்கொள்ளும் போது ஏற்படும் சவால்கள் மற்றும் தடைகள் தொடர்பாக எங்களுக்கு அதிக பாராட்டுக்களைப் பெற்றுக்கொடுத்தது. நாங்கள் பல புதிய திறன்களைப் பெற்றுள்ளதுடன், மிக முக்கியமாக, கடற்தொழிலாளர் சமூகத்தின் இருப்பிடம் அல்லது மதிப்பு சங்கிலியில் உள்ள பங்குகளுக்கு அப்பால் கடற்தொழிலாளர் சமூகங்கள் நாடு முடக்கலினால் எந்த அளவிற்கு எதிர்மறையாக பாதிக்கப்பட்டது என்பது தொடர்பாகக் கற்றுக் கொண்டோம். அந்த வைரசு இன்னும் நம்மிடையே உள்ளது, மேலும் எதிர்வரும் காலத்திலும் இது இருக்கும், எனவே இந்த இயற்கையின் நடவடிக்கையானது, எமது முன்னேற்றத்தின் போது ஏற்படக்கூடிய ஒப்பான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான எதிர்ப்புத்தன்மை மற்றும் திறனையும் உருவாக்க உதவுகிறது.

இறுதியாக, நிதி வழங்கியதனூடாக எமது நோக்கத்தினை நிஜமாக்க உதவிய புதிய இங்கிலாந்து நீர்வாழ் உயிரினக்காட்சியகத்தின் கடற்பாதுகாப்பு நடவடிக்கை நிதியத்திற்கு நன்றி சொல்ல விரும்புகிறோம். மேலதிகமாக, எங்கள் நிறுவனர் கலாநிதி. ஆஷா டி வோஸ் மற்றும் எங்கள் இணைப்பாளர் கலாநிதி. சங்கீதா மங்குபாய், வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் பிஜி நாட்டு திட்ட இயக்குனர் ஆகியோருக்கு அவர்களின் வழிகாட்டுதலுக்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். திருமதி ஜெகதீஸ்வரி ஏகாம்பரம் குணசிங்கம் மற்றும் எங்கள் பதினான்கு நேர்காணல் செய்பவர்கள் இல்லாமல் இந்த செயற்திட்டத்தின் தகவல் சேகரிப்பு பொறிமுறை சாத்தியமில்லை – கௌசல்யா பாலசூரிய, திலினி கமகே, மனுஜா ஹெண்டவிதாரன, இஃப்லால் இலியாஸ், தமிழினி கணேசலிங்கம், முஹம்மது முஜாஸ், கஜந்தினி ராஜநளேந்திரன், ஷாலங்கா ரஞ்சுலா, ரிஃப்தா ரிஸ்வான், அந்தோனி சந்தோஷ், சரண்யா சின்னத்துரை, சத்தியவாகீஸ்பரன் சிவந்தன், அபிலாகினி விக்ரமன் மற்றும் முத்துலிங்கம் யுஹிந்தன்

wave
wave

Marine Conservation Action Fund

Supporting locally-led ocean action worldwide